இபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் வேட்புமனுக்கள் ஏற்பு, அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைப்பு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது

இபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் வேட்புமனுக்கள் ஏற்பு, அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைப்பு

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.

அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மனு தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனு ஏற்கப்பட்டது.

அதேபோல, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அமமுக வேட்பாளர் முத்துச்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரேம் சந்தர், மக்கள் நீதி மயம் வேட்பாளர் கணேஷ்குமார் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை, தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலு தலைமையில் நடைபெற்றது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 55 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது இருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் சீமான் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் கடம்பூர் செ ராஜு ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதேபோல, கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. அதிமுக வேட்பாளரும், போக்குவரத்துறை அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.