பாகிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பும் இந்தியா

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் இன்னும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று சேரவில்லை என்றும் இருப்பினும், இன்னும் சில நாட்களில் தடுப்பூசி சென்று சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பும் இந்தியா

டெல்லி:

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி தேவையான அளவு தயாரிக்கப்படுவதில்லை, இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்கள் முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்திய தடுப்பூசி 
இந்தியா உள்ளிட்ட தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்து உதவுகின்றன. தற்போது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் இன்னும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று சேரவில்லை என்றும் இருப்பினும், இன்னும் சில நாட்களில் தடுப்பூசி சென்று சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவசரக்கால ஒப்புதல் 
பாகிஸ்தான் நாட்டில் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசிக்கு இந்தாண்டு தொடக்கத்தில் அவரசக்கால அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் பாகிஸ்தான் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து கிடைக்கும் தடுப்பூசிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி ஏற்றுமதி 
இதுவரை இந்தியா பல்வேறு நாடுகளுக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. அண்டை நாடுகளுக்கு இலவசமாகத் தடுப்பூசிகளை வழங்குவது, கோவாக்ஸ் திட்டத்தின் கீழ், வணிக ரீதியில் என மூன்று வகையில் இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதுவரை 65 நாடுகளுக்கு 5.79 கோடி தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

கோவாக்ஸ் திட்டம் 
வளரும் நாடுகளுக்கு முறையாக தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் என்ற திட்டத்தை முன்னெடுத்தது. வளரும் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை விரைவில் வழங்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்திற்கு வல்லரசு நாடுகளின் ஆதரவு பெரும்பாலும் கிடைக்கவில்லை. அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் தங்கள் நாட்டிலுள்ளவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என விரும்புவதால் மற்ற ஏழை நாடுகளுக்கு போதிய தடுப்பூசி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.