ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கப் போவது பிரபல இந்திய நடிகை

ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கப் போவது பிரபல இந்திய நடிகை

சென்னை: 
93வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர். வரும் திங்கட்கிழமை மார்ச் 15ம் தேதி ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகி உள்ள நாமினிகளை நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் இணைந்து அறிவிக்க உள்ளார்.


சினிமா உலகின் பெருமை 
அமெரிக்க திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கர் விருதுகள், சினிமா உலகின் உயரிய விருதாக உலக சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான பிரிவில் விருது வென்று விட மாட்டோமா என இந்தியா உள்ளிட்ட ஏகப்பட்ட நாடுகள் தவம் கிடக்கின்றன.

பிரியங்காவுக்கு கிடைத்த பெருமை 
கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பவராக நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலை வெளியிடும் பெருமை நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்துள்ளது. கணவர் நிக் ஜோனஸ் உடன் இணைந்து இந்த அறிவிப்பை வரும் மார்ச் 15 அன்று வெளியிடவுள்ளார் பிரியங்கா சோப்ரா.

93வது ஆஸ்கர் விருது விழா வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான இறுதி செய்யப்பட்ட பரிந்துரை பட்டியல் வரும் மார்ச் 15ம் தேதி திங்கள் அன்று அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டு வாக்கு செலுத்தும் முறையில் தேர்வாக உள்ளன.


சூரரைப் போற்று இடம்பெறுமா?


இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஆரம்பத்திலேயே வெளியேறி விட்டது. ஒடிடியில் வெளியான படங்கள் போட்டியிடலாம் என்கிற விதியின் கீழ் ஆஸ்கர் ரேஸில் கலந்து கொண்டுள்ள சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஒரு ஆஸ்கரையாவது வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பில் இந்திய சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.