4 மாநிலங்களை தவிர்த்து.. பிற மாநிலங்களிலிருந்து பெங்களூர் செல்வோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை

பெங்களூர் நகரம் செல்லக் கூடிய எந்த மாநிலத்துகாரராக இருந்தாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, சண்டீகர் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் இருந்து பெங்களூர் செல்லுவோர் மட்டும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்து இருப்பது கட்டாயம். மற்றபடி, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூர் செல்வோர் சான்றிதழை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

4 மாநிலங்களை தவிர்த்து.. பிற மாநிலங்களிலிருந்து பெங்களூர் செல்வோருக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயமில்லை


ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த மாநிலத்துக்காரராக இருந்தாலும் பெங்களூர் செல்ல வேண்டுமென்றால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் அல்லது பெங்களூர் மாநகராட்சி பரிசோதனை நடத்தி நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டும்தான் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் மார்ச் மாதம் 25ஆம் தேதி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மக்கள் கோபம் பெங்களூர் நகரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பிற மாநிலங்களுக்கு சென்று விட்டு ஊர் திரும்பும் போது இவ்வாறு பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பஸ், ரயில், விமானம், சொந்த கார் உள்ளிட்ட எந்த வகை வாகனமாக இருந்தாலும் சரி, அதில் பயணித்து பெங்களூர் வருவோர் இதுபோல பரிசோதனைகளை எடுத்து கொரோனா இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தான் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நடவடிக்கை இல்லை பெங்களூர் நகரில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 31-ஆம் தேதி வரையில் இதற்கான எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுப்பதாக தெரியவில்லை. எனவே பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது

விளக்கம் எங்கே வைத்து பரிசோதனை செய்வார்கள், நகர எல்லையிலா, மாநில எல்லையிலா, உள்ளிட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் இல்லை. இந்த நிலையில்தான் பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத பிரசாத் அளித்துள்ள ஒரு பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். பெங்களூர் வரக்கூடிய அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவிடலாம் என்று மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அந்த கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது

பயணிகள் மகிழ்ச்சி அதே நேரம் ஏற்கனவே, மாநில அரசு உத்தரவிட்டபடி, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகா செல்வோர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். கர்நாடக அரசின் இந்த முடிவால் பிறமாநில பயணிகள், குறிப்பாக, தமிழக பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.