மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி நாளை முதல் பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு

சென்னை: திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என போக்குவரத்து கழகம் அனுப்பிய நோட்டீசுக்கு பயப்பட மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் இதுவரை எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் தொமுச குற்றம் சாட்டியுள்ளது. 14 வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமை குறைப்பு போன்ற கோரிக்கைகளை பல நாட்களாக நிர்வாகத்திடம் எழுப்பி வருகின்றனர். இது குறித்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி நாளை முதல் பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு


இதனையடுத்து ஊதிய உயர்வு, பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். காலவரையற்ற இந்த வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

 இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் கண்டிப்பாக பணிக்கு வருமாறு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் பஸ் ஊழியர்கள் பங்கேற்று பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் தொமுச நடராஜன், இதுபோன்ற மிரட்டல்கள், எச்சரிக்கைகளை எத்தனையோ முறை பார்த்து விட்டோம் என்று தெரிவித்தார்.

 திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வு தந்திருக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சம்பள உயர்வு தரப்படாதது ஊழியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டிலும் அரசு ஒதுக்குவதில்லை. தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்துக் கொண்டு போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதுவரை சுமார் 8 ஆயிரம் கோடி தொழிலாளர்களின் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு கால பலன்கள் ஓய்வு பெறும் நாளில் கிடைப்பதில்லை என்று கூறினார். இந்த ஆட்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ஊழியர்களின் பிரச்சனையை அரசுக்கு பலமுறை எடுத்துக்கூறியும் அரசு அதை தீர்ப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை முதல் கட்டாயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார். 90 சதவிகிதம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள். தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் உள்ளது. இதில் 15 ஆயிரம் பேருந்துகள்தான் இயக்கப்படுகிறது. 7 ஆயிரம் பேருந்துகள் டெப்போவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் நடராஜன் கூறினார். 
தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்.